
தளபதி விஜய் இன்று முன்னணி கதாநாயகனாக உச்சத்தில் ஜொலித்து கொண்டிருக்கிறார். அவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். எனினும், அவர் தன் தந்தை மூலமாக எளிதில் நடிக்க வந்து விட்டார் என்ற விமர்சனம் இருக்கிறது. இந்நிலையில், தளபதி விஜய்யின் தாயார் பேசிய பழைய பேட்டி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, பிளஸ் டூ முடித்துவிட்டு லொயோலா காலேஜில் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தபோது விஜய், எனக்கு நடிப்பதில் விருப்பம் இருப்பதாக கூறினான். நாங்கள் படிக்கச் சொன்னோம். ஆனால் நடிப்பதில் தான் விருப்பம் இருப்பதாக அவன் கூறினான்.
நடிக்க வேண்டும் என்று சொல்கிறாயே, ஏதாவது ஒரு காட்சியை நடித்து காட்டு என்று கூறினோம். அப்போது, அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் சார் பேசும் வசனத்தை அழகாக பேசி காண்பித்தான். அதை பார்த்தவுடன் எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகிவிட்டது. அவனை டாக்டராக்க வேண்டும் என்று நினைத்தோம்.
ஆனால், எங்கள் மூலமாக அவன் திரையுலகிற்கு வந்தாலும் கடின உழைப்பால் தான் பெரியாளாகி இருக்கிறான். எளிதில் அவன் சினிமாவிற்கு வந்து விட்டாலும் அந்த இடத்தை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறான் என்று தெரிவித்திருக்கிறார்.