தன் கார் ஓட்டுனரை.. கல்லூரி பேராசிரியராக்கிய அப்துல் கலாம்.. நெகிழ வைக்கும் கதை..!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். அந்த வகையில் அவர் செய்த மிக சிறப்பான செயல் குறித்து மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மேடை ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் தன்னிடம் பணியாற்றும் ஓட்டுனரிடம் தம்பி நீ என்ன படித்திருக்கிறாய்? என்று கேட்டுள்ளார்.

   

அதற்கு அவர், பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்ததாக கூறியுள்ளார். அப்துல் கலாம் அவர்கள், நான் மேடையில் பேச சொல்லும்போது நீ என்ன செய்து கொண்டிருப்பாய்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த டிரைவர், ரேடியோ கேட்டுக் கொண்டிருப்பேன் என கூறியுள்ளார். அப்துல் கலாம் அவர்கள், நான் வசதி செய்து கொடுக்கிறேன் பத்தாம் வகுப்பு திரும்பவும் படிக்கிறாயா? என்று கேட்டு புத்தகம் வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த ஓட்டுனர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்து விட்டார். அதனைத்தொடர்ந்து, நீ பதினொன்று பன்னிரண்டும் படி என்று கூறி படிக்க வைத்திருக்கிறார். அவரும் வேலை பார்த்துக் கொண்டே மீதி நேரங்களில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து விட்டார். மேலும், அப்துல் கலாம் நீ கல்லூரி படிப்பை படிக்கிறாயா? என்று கேட்டபோது, அந்த ஓட்டுனர் இதுவே எனக்கு பெரிய விஷயம் சார்.

நான் உங்களிடம் வேலை பார்த்துக் கொண்டே எப்படி கல்லூரிக்கு சென்று படிப்பது என்று கேட்டுள்ளார். அதற்கு அப்துல் கலாம் அவர்கள், கரஸ்பாண்டன்ஸில் படி என்று கூறி படிக்க வைத்துள்ளார். அதிலும் அவர் தேர்ச்சி பெற, அடுத்ததாக உனக்கு எந்த பாடம் மிகவும் பிடிக்கும் என்று கேட்டிருக்கிறார்.

அவர் வரலாறு என்று கூற ஆராய்ச்சி படிப்பை படிக்குமாறு ஊக்கப்படுத்தியிருக்கிறார். அவரும் ஆராய்ச்சி படைப்பை முடித்து திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவரின் பெயர் கதிரேசன் என்று விவேக் அப்துல் கலாம் அவர்கள் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.