தமிழ்நாட்டின் முதல்வராக எம்ஜிஆர் அவர்கள் இருந்த காலத்தில் ஐந்தாம் உலக தமிழ் மாநாடு மதுரையில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில், கண்ணதாசன் தலைமையில் ஒரு கவிஞரங்கமும், சுரதாவின் தலைமையில் ஒரு கவியரங்கமும், புதுமை பித்தன் தலைமையில் மூன்றாவது கவியரங்கமும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எம்ஜிஆர் அவர்கள் வாலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கண்ணதாசன் தலைமையில் நடக்கும் கவியரங்கத்தை நீங்கள் தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறினாராம். அதனை, மறுத்து எதுவும் கூற முடியாமல், நீங்கள் செய்தால் சரிதான் அண்ணே என்று கூறிவிட்டாராம் வாலி.
அதன் பிறகு அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அவ்வை நடராஜனை, தொடர்பு கொண்ட வாலி கவியரங்கத்தை தொடங்கி வைப்பதற்கு அதனை தலைமை தாங்குபவரை விட வயதில் பெரியவராக இருக்க வேண்டும். ஆனால், நான் கண்ணதாசனை விட வயதில் சிறியவன். அது சரியாக வராது என்று தெரிவித்து விட்டாராம்.
அது மட்டுமல்லாமல், அதற்கு பதில் என் தலைமையில் கவியரங்கம் ஒன்றை நடத்தலாமே என்று வாலி கூற அதற்கு அவ்வை நடராஜனும் சரி என்று கூறியுள்ளார். வாலி சொன்ன தலைப்பை எம்ஜிஆரிடம் கூறியிருக்கிறார், அவ்வை நடராஜன். அதனை கேட்டவுடன், எம்ஜிஆர் கோபமடைந்து விட்டாராம்.
உடனே வாலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதனை என்னிடம் நேரடியாகவே கூறியிருக்கலாமே? நான் ஒரு திட்டம் போட்டால், நீங்கள் ஒரு திட்டம் போடுகிறீர்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் நானா? இல்லை நீங்களா? என்று கேட்டுவிட்டு தொலைபேசியை வைத்து விட்டாராம்.
அதன் பிறகு, சினிமாவிற்கு பாடல் வரி எழுதும் வாலியால் எப்படி கவியரங்க கவிதைகள் எழுத முடியும்? என்று எம்ஜிஆர் கேட்டிருக்கிறார். அதற்கு அவ்வை நடராஜன் வாலி கவிதைகள் பற்றி எம்ஜிஆர் இடம் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு வாலியை நேரில் அழைத்து முன்பே என்னிடம் ஏன் இதனை தெரிவிக்கவில்லை? உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறி வாலியின் தலைமையில் கவியரங்கம் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த கவியரங்கம் வாலிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.