படப்பிடிப்பை விட்டு பாதியில் வெளியேறிய MR. ராதா.. கைவிட்ட திரைபிரபலங்கள்.. ரத்த கண்ணீரின் கண்ணீர் கதை..!

தமிழ் திரையுலகில், ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து அதிக சம்பளம் பெற்ற முதல் நடிகராக விளங்கியவர் எம் ஆர் ராதா. கடந்த 1954 ஆம் வருடத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கி எம் ஆர் ராதா நடித்து வெளியான ரத்த கண்ணீர் திரைப்படம் இன்று வரை மக்களால் பேசப்பட்டு வருகிறது.

அத்திரைப்படத்திற்கு சி ஆர் சுப்புராமன் இசையமைத்திருப்பார். பெருமாள் முதலியார் தயாரித்திருந்தார். திரைப்படத்தின் கதையை எம் ஆர் ராதாவிடம் கூறிய போது அதற்கு ஒரு லட்சம் சம்பளம் கேட்டு இருக்கிறார். அதற்கு முன்பு, கே.பி சுந்தராம்பாள், நந்தனார் என்ற திரைப்படத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று இருந்தார்.

   

அதுதான் அன்றைய காலத்தில் அதிகபட்ச சம்பளம். ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் மூலம் எம் ஆர் ராதாவும் அந்த பட்டியலில் சேர்ந்தார். அதன் பிறகு, அந்த திரைப்படத்திற்கு ஒரு வருடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சம்மதித்த எம்.ஆர். ராதா படப்பிடிப்பில் பங்கேற்க தொடங்கினார்.

ஆனால், ஓராண்டு கடந்தும் படப்பிடிப்பு முடிவடையவில்லை. எனவே, கோபமடைந்த எம்.ஆர் ராதா படப்பிடிப்பை விட்டு வெளியேறி விட்டார். மேலும் சம்பளத்தை அதிகமாக கேட்டிருக்கிறார். இதனால் இயக்குனரும் தயாரிப்பாளரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, திரை பிரபலங்களை அழைத்து ரத்தக்கண்ணீர் திரைப்படத்தை முடித்த வரை போட்டு காண்பித்து எம் ஆர் ராதாவை சமாதானம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி அந்த படமும் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்தவர்கள், இந்த திரைப்படத்தை இதோடு விட்டுவிடுங்கள். அது தான் நன்றாக இருக்கும். இந்த முகத்தை எல்லாம் யார் பார்ப்பாங்க என்று கூறி விட்டார்களாம். அவர்களின் பேச்சை எல்லாம் கண்டு கொள்ளாமல் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் நேரடியாக எம்.ஆர் ராதாவிடம் சென்று நிலையை எடுத்து கூறி சம்பளத்தை அதிகப்படுத்தாமல் நடித்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு, எம்.ஆர் ராதாவும் சம்மதிக்க, அத்திரைப்படம் முடிவடைந்திருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. காலத்தால் அழியாத ரத்த கண்ணீர் திரைப்படம், தற்போது வரை எம் ஆர் ராதாவின் புகழை சொல்லும் விதமாக அமைந்துவிட்டது.