சாண்டி மாஸ்டர் ஒரு நடன கலைஞராக இருந்தாலும், இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலமாகத்தான் மிகவும் பிரபலமானார். தனது நடன திறமையாலும் நன்றாக பாடும் திறமையாலும் தன் காமெடியாலும் மக்களை கவர்ந்திழுத்தார். தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் கலகலப்புடன் வைத்திருப்பது சாண்டியின் குணாதிசயம்.
நடன இயக்குனர் சாண்டி ரஜினிகாந்த், கமல், விஜய், சிம்பு, தனுஷ் என பல நட்சத்திரங்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். நடன இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் 3:33 எனும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள சாண்டியின் அடுத்த திரைப்படத்துக்கு ’கிப்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் அல்போன்ஸ் புத்திரன் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா மற்றும் அல்போன்ஸ் புத்திரன் ஆகிய இரண்டு திரையுலக மேதைகள் சாண்டியின் அடுத்த படத்தில் இணைந்திருப்பதை கோலிவுட் திரை உலகமே ஆச்சரியமாக பார்த்து வருகிறது.
மேலும் இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜா ஏற்கனவே ஏழு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கோவை சரளா நடிக்க உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி சகானா சர்வேஷ், மகாலட்சுமி, சுதர்சன், சம்பத்ராஜ், ராகுல், சார்லி, சைக்கிள் மணி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சாண்டி தற்பொழுது தனது பிறந்தநாளை ‘GIFT’ படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடிய அழகிய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.