கொரோனா அச்சம் காரணமாக வயதான தம்பதி எடுத்த விபரீத முடிவு!! அதனால் நடத்த சோகம்!!

சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த வயதான தம்பதி பெருமாள் – தெய்வானை. பட்டாசு ஆலையில் கூ.லி வேலை செய்யும் மகன் முத்துமணியின் ஆதரவில் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் 62 வயதான தெய்வானை ஏற்கெனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.

இப்படி நோயுடன் வாழ்வதைக் காட்டிலும் செத்துவிடலாம் என தனது கணவர் பெருமாளிடம் அவர் அடிக்கடி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. அப்போதெல்லாம், வயதாகிவிட்டால் அப்படித்தான் என மனைவிக்கு ஆறுதல் கூறிய பெருமாள் மருந்து சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என கூறி வந்துள்ளார்.

   

இந்த சூழலில் கொரோனா பரவல் இருவரையும் அச்சப்பட வைத்தது. கொரோனா வந்தால் இருவருமே பிழைக்க மாட்டோம் என மகன் முத்துமணியிடம் கூறி புலம்பியுள்ளனர். அவர்களை முத்துமணி சமாதானப்படுத்தியுள்ளார்.

ஆனாலும், அச்சம் காரணமாக வெளியூரில் வசிக்கும் தனது மகள்கள் இருவரையும் அழைத்து வருமாறு முத்துமணியிடம் சொல்லியிருக்கின்றனர். வீட்டிற்கு வந்த இரு மகள்களும், மருத்துவமனை சென்று வந்தால் எல்லாம் சரியாகும் என நம்பிக்கையாக பேசியிருக்கின்றனர்.

ஆனால், மருத்துவமனை சென்றால் அதிகமாக செலவாகும் என வருந்திய பெருமாளும், தெய்வானையும் யாரிடம் பணம் உள்ளது என விரக்தியில் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மகள் சாந்தி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது வயல்களில் தெளிக்கப்படும் பூச்சி மருந்தின் வாசம் அடித்ததால் அம்மா, அப்பா இருந்த அறைக்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கே பூச்சி மருந்து விஷத்தை குடித்த நிலையில் இருவரும் மயங்கிக் கிடந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைக்கும் அங்கிருந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்ற நிலையில் முதலில் பெருமாள், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தெய்வானையும் மரணமடைந்தார்.